
நெல்லையில் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து தொடர்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்களைப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சுதீஸ் - 6ஆம் வகுப்பு 'சி' பிரிவு, விஷ்வரஞ்சன் - 8ஆம் வகுப்பு 'ஏ' பிரிவு, அன்பழகன் - 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு என மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நிவாரணமும் அறிவித்துள்ளார். “இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. கரோனா காரணமாக 18 மாதங்கள் கழித்து பள்ளி திறக்கப்பட்டபோது பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து முறையாக ஆராயப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.