திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டு, காமராஜ் நகர், ஜிடி நாயுடு தெருவிற்குப் பின்புறமாக அமைந்திருந்த வாணியன் குளத்தை தற்போது காணவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு ஏக்கருக்கும் மேலான பரப்பளவு கொண்ட குளம், கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது குளம் இருந்ததற்கான அடிச்சுவடுகள் கூட இல்லாமல் காணாமல் போயுள்ளது.
மழைக்காலத்தில் வரும் வெள்ளம் இந்தக் குளம் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் சென்றடையும். ஆனால் தற்போது நீர்நிலைகளை அழித்து வீடுகளைக் கட்டிவிட்டதால் மழை நீர் முழுவதுமாக தெருக்களில் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்போடு இந்தக் குளம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி ஜனநாயக சமூகநல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் மனு ஒன்றை அளித்துள்ளார்.