உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக கனிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து பாஜக கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், "கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்.உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து" என்று தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், "கூட்டணியில் இருந்து கொண்டு எதிரான கருத்துக்களை கூறுவது கூட்டணி தர்மம் இல்லை" என்று அதிரடியாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்ப, பாஜக கட்சியின் மாநில தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார் என்று ஜெயகுமார் கொளுத்திப் போட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே புகை மூட்டம் கிளம்பியது.
இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், "எனக்கு அமைச்சர் ஜெயக்குமார் சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை. கூட்டணி தர்மத்திற்காக அமைதியாய் இருக்கிறேன். முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் மீது நான், மரியாதை வைத்திருக்கிறேன்." என்று தெரிவித்தார். இந்த வார்த்தைப்போர் எங்கு போய் முடியும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.