பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை தொடர்படுத்தி பேசியதற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் மிரட்டிய சம்பவங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்த பேச்சு கலைஞர் தொலைக்காட்சியிலும், நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
பொள்ளாச்சி சம்பவத்தில், தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசிவருவதால், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னைப் பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி, நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, இவர்களுக்கு எதிராக கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.