விளாத்திகுளம் சப்-டிவிஷனில் இருக்கும் காடல்குடி காவல் நிலைய சரகம், முழுக்க முழுக்க கிராமங்களை உள்ளடக்கியது. ஸ்டேசனைவிட்டு கொஞ்சம் தூரம் போனாலே, ராமநாதபுரம் மாவட்ட எல்லை வந்துவிடும். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது இந்தச் சரகம்.
இந்த ஸ்டேசன் போலீஸ்காரர்கள் 2 பேர், கோழி திருடிய வழக்கில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 3 போலீசார் மீது, 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நாம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். விஷயம் இதுதான்.
சில நாட்களுக்கு முன்னர் போலீஸ்காரர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ் ஆகியோர் அந்த ஊரில் கறிக்கடை நடத்தும் முத்துச்செல்வனுக்கு, இரவு 11.30 மணிக்கு ஃபோன் செய்து, ஒரு கிலோ கோழிக்கறி வேண்டும் என கேட்டுள்ளனர்.
ஃபோனில் பேசிய முத்துச்செல்வனின் மனைவி ஜெயா, “அவர் (முத்துச்செல்வன்) தூங்கிவிட்டார். அவரால் இனிமேல் எழுந்து வந்து கடையைத் திறப்பது இயலாத காரியம். வேண்டுமெனில் காலையில் வந்து கறி வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்விட்டு ஃபோனைத் துண்டித்துள்ளார். மீண்டும், மீண்டும் போலீசார் ஃபோன் பண்ணவே, மொபைலை சைலன்டில் போட்டுவிட்டார் ஜெயா.
இந்நிலையில், காலையில் மீண்டும் செல்ஃபோனில் முத்துச்செல்வனை தொடர்புகொண்ட போலீஸ்காரர் பாலகிருஷ்ணன், "நேற்றிரவு ஃபோன் பண்ணினோம். நீ ஃபோனை எடுக்கவே இல்ல... உன் கடையில் இருந்து ஒரு கோழி எடுத்துகிட்டோம். அதற்கான காசை உனக்கு கொடுத்துவிடுகிறோம்" என கூறியிருக்கிறார். "இல்ல சார்.. பரவாயில்லை. காசெல்லாம் வேண்டாம்" என்று முத்துச்செல்வன் கூறியிருக்கிறார்.
விஷயம் அதோடு முடிந்துவிட்டது என நினைக்கையில், கோழி திருடிய விஷயம் மெல்ல கசிந்து விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷின் மூலம் எஸ்.பி. ஜெயக்குமாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களை ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டார் எஸ்.பி. ஜெயக்குமார். இதனால், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணனும் சதீசும், ஆக. 19ஆம் தேதி (நேற்று முன்தினம்) முத்துச்செல்வனின் கறிக்கடைக்கு வந்து, "கோழி திருடிய விஷயத்தை ஏன் வெளியில் சொன்னாய்? எங்களுக்கு இப்ப ட்ரான்ஸ்ஃபர் போட்டிருக்காங்க.." என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
"என்னதான் இருந்தாலும், நீங்க கோழி திருடினது தப்பு சார்" என்று முத்துச்செல்வன் கூறவே, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் முத்துச்செல்வனை போலீஸ்காரர்கள் கட்டையால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது, தடுக்க முயன்ற ராமர் என்பவரையும் போலீசார் தாக்கியுள்ளனர். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அங்கு வந்த போலீஸ்காரர் பாலமுருகன், தாக்குதலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன், சதீஷ் ஆகியோரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார்.
இதற்கிடையே, தாக்குதலுக்கு ஆளான முத்துச்செல்வன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸ்காரர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ் ஆகியோர் மீது அச்சுறுத்தல், அசிங்கமாகப் பேசுதல், தாக்குதல், காயம் ஏற்படுத்ததல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த பாலகிருஷ்ணன்.?
"திண்டுக்கல் சரகத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பாலகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். முதலில் விளாத்திகுளத்தில் பணியாற்றினார். அங்கு மணல் கடத்தல் புள்ளியோடு தொடர்பில் இருந்ததால், காடல்குடிக்கு மாற்றப்பட்டார். இப்போது கோழி திருட்டில் சிக்கி பெயரைக் கெடுத்துக்கிட்டார்.
காடல்குடி மக்கள் எல்லாம் ரொம்ப தங்கமானவங்க. இப்போ ஊரே ஒன்றுகூடி நிற்குதுன்னா, இவங்க ரொம்ப அடாவடி பண்ணிருப்பாங்க போல... இவங்க இரண்டு பேரும் பண்ணிய சேட்டையால் இப்போது பாலமுருகன் ஏட்டையாவும் மாட்டிக்கிட்டார். அவர் சண்டையை விலக்கிவிட்டவர். அவரை ஆயுதப்படைக்கு மாற்றியிருக்காங்க..." என்று நம்மிடம் விவரித்தார் காடல்குடியில் முன்பு பணியாற்றிய காவல்துறையைச் சேர்ந்த நண்பர்.
படங்கள்: விவேக்