தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தங்களது விவசாய நிலம் வழியாக மின் கோபுரம் மூலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மின் இணைப்பு கொண்டு செல்ல திட்டமிடப்படுவதாகவும், இதனால் தங்களது விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு எதிராகக் குரல் கொடுத்தால் தங்களை ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்கள் எனவும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நான்கு பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலத்தின் உரிமையாளர்களான மகேஸ்வரி, கவிதா மற்றும் அவரது உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும்பொழுதே தற்கொலை முயற்சிக்காக அவர்கள் வந்த காரில் மண்ணெண்ணெய் கேனையும் எடுத்து வந்திருந்தனர். அதனைத் தெரிந்துகொண்ட தனிப்பிரிவு காவலர் அருண், அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது காரில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு ஓடினார். இதனைத் தூரத்திலிருந்து பார்த்த பெண்கள் காவலர் அருணை துரத்திக் கொண்டே ஓடினர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மண்ணெண்ணெய் கேனை தூக்கிக்கொண்டு ஓடிய காவலர் அவற்றை கீழே ஊற்றியதும், துரத்திச் சென்ற பெண் ஒருவர் 'ஏன் சார் இப்படி அநியாயம் பண்றீங்க...' மனுஷனாயா நீ எல்லாம். எங்களை நிம்மதியா சாகக்கூட விடமாட்டீங்களா'' என திட்டினார். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து சாலைக்கு வந்த அவர்கள் சாலையில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது காவலர் தரப்பில் உங்கள் 'பிரச்சனையை சொல்லுங்கள் தீர்த்து வைப்பார்கள். ஆனால் அதற்கு எதற்கு தற்கொலை முயற்சி எல்லாம் எடுக்கிறீர்கள்' என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.