அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இருவரும் இவரது மகன் பாலமுருகநனும் உடையார்பாளையம் அருகே சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று இருவர் மீதும் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமுருகன் படுகாயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் செந்தில் குமார் உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்யுமாறும் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில் செந்தில்குமார் உடலை பெற்றுச் செல்லுமாறு அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் அளித்தனர். ஆனால் அவர்கள் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கைது செய்யும் வரை செந்தில்குமார் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்படாததால் செந்தில்குமார் உறவினர்கள் சாலை மறியலை தொடர்ந்தனர். போலீசார் திடீரென்று மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள். இதனால் ஜெயங்கொண்டம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.