தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன் (30). இவர், 42 கோழிகளை வளர்த்து வருகிறார். பிப். 22ம் தேதி, சொந்த வேலையாக தினகரன் குடும்பத்துடன் மதுரைக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், தினகரன் வளர்த்து வந்த கோழிகளில் 39 கோழிகளை மர்ம நபர்கள் திருடிவிட்டதாகவும், 3 கோழிகள் மட்டுமே இருப்பதாகவும் அவருடைய தம்பி செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து மதுரையில் இருந்து வீடு திரும்பிய தினகரன், கோழிகள் களவு போனது குறித்து கோபிநாதன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வடகரையைச் சேர்ந்த பாரதி (28), பொன்னுமணி (28), பூவரசன் (27) ஆகிய மூவரும்தான் கோழிகளை திருடி விற்று மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் பொன்னுமணி, மத்திய பாதுகாப்புப்படையில் காவலராக பணியாற்றி வருவதும், விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு வந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து கோழி திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.