Published on 28/04/2020 | Edited on 28/04/2020
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மக்கள் மதிக்கின்றனரா என போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் லால்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடையினை மீறி வீட்டில் ஆட்டிறைச்சி விற்பனை செய்தவரிடம் 15 கிலோ ஆட்டிறைச்சியினை அப்போதைய லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சதீஸ்குமார் பறிமுதல் செய்து ஸ்வாக செய்த பிரச்சனை இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை.
இந்நிலையில் லால்குடி மீனவத்தெருவில் வசிக்கும் பரமசிவம் மகன் ரஜினி (43). மீனவத் தொழில் செய்யும் இவர் அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மீன் பிடிக்க செல்லாத நிலையில் வீட்டிலிருந்த ரஜினியை, லால்குடி காவல்நிலைய ரைட்டர் வழுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று லால்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத்திடம் ஒப்படைத்துள்ளார். ரஜினி தடையினை மீறி மீன் விற்பனை செய்ததாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் பொய் வழக்கு பதிந்து பிணையில் விட்டுள்ளார்.
ஏப்ரல் 26 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் கார்த்தி (22). மீன் பிடித்தொழில் செய்து வரும் இவர், கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று மீன் பிடித்து இவர்களது குடும்பத்தினர்கள் சமைத்து சாப்பிட வைத்திருந்த சுமார் 8 கிலோ இறால் மீனை வீட்டில் வைத்திருந்தார். அப்போது மீன் இருப்பதனை மோப்பம் பிடித்த காவல்நிலைய ரைட்டர் செல்வராஜ் கார்த்தி வீட்டின் உள்ளே அத்துமீறி உள்ளே புகுந்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த பெண்களை தகாக வார்த்தையால் திட்டி, அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்தும், மீனவர் கார்த்தியையும் 8 கிலோ இறால் மீனையும் எடுத்துக் கொண்டு லால்குடி காவல்நிலையம் சென்றனர். அங்கு மீனவர் கார்த்தியை லாக்கப்பில் வைத்து அடித்தும் தடையினை மீறி மீன் பிடித்து விற்பனை செய்ததாக பொய் வழக்கு பதிந்து , கார்த்தியை பிணையில் விட்டனர்.
ஆனால் பறிமுதல் செய்த இறால் மீனை காவல்நிலைய ரைட்டர் செல்வராஜ் ஸ்வாக செய்துவிட்டார். அதேபோல அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டில் காலைப் பொழுதில் வாழை இலை மற்றும் தேங்காய் விற்பனை செய்த 62 வயதுடைய செல்வம் என்பவரிடம் பறிமுதல் செய்த 40 தேங்காய் மற்றும் இரண்டு வாழை கட்டு இலையினை காவல்நிலைய ரைட்டர் செல்வராஜ் தரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்த திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் லால்குடி மற்றும் முசிறி டிஎஸ்பி இருவரையும் விசாரணை செய்ய உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை அப்படியே விசாரணை அதிகாரிகளிடம் கூறியதன் அடிப்படையில் லால்குடி காவல்நிலைய ரைட்டர் செல்வராஜை உடனடியாக திருச்சி ஆயுதபடைக்கு மாற்றிட திருச்சி போலீஸ் எஸ்பி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார்.