சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்கிற ஒருபகுதி மீனவர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையே இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. அரசிடம் பேசி முடிவு தெரிவிக்கப்படும் என்று மீனவர்களிடம் அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததால் முடிவுக்கு வந்துள்ளது.
நாகை மாவட்டம் நம்பியார் நகர், சீர்காழி, பூம்புகார் ஆகிய கிராம மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சீர்காழி மற்றும் நாகை நம்பியார் நகர் மீனவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர், நாகை எஸ்,பி செல்வ நாகரத்தினம் மீனவ அதிகாரிகள் ஆகியோர் மீனவர்களிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் தமிழக அரசிடம் இந்த விவகாரம் குறித்து பேசி வருகின்ற புதன்கிழமை அன்று மீனவ பிரதிநிதிகளிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதிகாரிகளின் வாக்குறுதிக்குச் சம்மதம் தெரிவித்த மீனவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக விளக்கிக் கொள்ள கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு முடிவு எடுத்து பதிலளிப்பதாகக் கூறிவிட்டு வெளியேறினர். ஆனாலும் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.