கரோனோ வைரஸ் அச்சுறுத்ததால் திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிகளை விற்கக்கூடாது என்றும் காய்கறி கடைகள் சனி ஞாயிறு செயல்படக்கூடாது என்றும் அதேபோல காய்கறி கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி சில போலிஸ்காரர்கள் லஞ்சம் வாங்க ஆரம்பித்துள்ளனர்.
இதனையெல்லாம் மாவட்ட எஸ்.பி. கவனத்திற்குச் சிலர் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு போலிஸ் 13 பேரை ஓரே நாளில் டிரான்ஸ்பர் செய்தார் திருச்சி எஸ்.பி.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து திருமண மேடு பகுதியில் ஆட்டு இறைச்சி கடை வைத்திருப்பவர்களிடம் லால்குடி எஸ்.ஐ. சதீஷ்குமார் இலஞ்சமாக 15 கிலோ ஆட்டு இறைச்சி வேண்டும், இல்லை என்றால் கேஸ் போட்டுவேன் என்று மிரட்டியதாகவும், இதே போன்று கள்ளச்சாரயம் விற்பனை செய்பவர்கள், பறிமுதல் செய்த வாகங்கனை விடுவிக்க வேண்டும என்று வருபவர்களிடம் லஞ்சம் என இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி கொழித்திருக்கிறார் என்று மாவட்ட எஸ்.பி.க்கு புகார் சென்றிருக்கிறது. இது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்க சொல்லியிருக்கிறார் மாவட்ட எஸ்.பி. தனிப்படையினர் இதுகுறித்து விசாரித்து மாவட்ட எஸ்.பி.க்கு சில தகவல்களைச் சொல்லியிருக்கின்றனர். உடனே எஸ்.ஐ. சதீஷ்குமாரை லால்குடியில் இருந்து மணப்பாறைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார்.