வேலூர் மாவட்டம் ஆந்திரா - தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதிகளான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை, குடியாத்தம், பொன்னை சேர்க்காடு உள்ளிட்ட மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் மாநில எல்லைப் பகுதியான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் நேற்றிரவு வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்றனர்.
கார் நிற்போதுபோல் போக்கு காட்டிவிட்டு நிற்காமல் சென்றதால், உடனடியாக தங்களது வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்றனர். சுமார் 6 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பள்ளிக்குப்பம் அருகே மடக்கி பிடித்தனர். கார் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
போலீசார் காரில் சோதனை மேற்கொண்டபோது அதில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 3,80,000 மதிப்புள்ள 605 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குட்கா பொருட்கள் மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கார் பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார் என ஆய்வு செய்தபோது அது, போலி நம்பர் பிளேட் கொண்ட வாகனம் எனத் தெரியவந்ததை அடுத்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓடிய அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பட பாணியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று காட்பாடி போலீசார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.