
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் பார்ப்பதற்காக வைத்திருந்த 4 டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பதாக கூறி காவலர் ஒருவர் பறித்து சென்றதாக இளைஞர்கள் செய்தியாளர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நண்பர்களுடன் ஐபிஎல் கிரிக்கெட் பார்ப்பதற்காக வாங்கி வைத்திருந்த டிக்கெட்களுடன் இளைஞர்கள் இருவர் மைதானத்திற்கு வெளியே சக நண்பர்களுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது காவலர் ஒருவர் அந்த இளைஞர்கள் வைத்திருந்த 4 டிக்கட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பதாக வைத்துள்ளதாக கூறி பறித்து சென்றுள்ளார். டிக்கெட்டுகளை பறித்து சென்றவர் நேராக மைதானத்திற்குள் சென்றுள்ளார். உள்ளே சென்ற அந்த காவலர் மீண்டும் வெளியே வரவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் புகார் அளித்த அந்த இளைஞர்கள்,
நாங்கள் வைத்திருந்தது மைதானத்திற்குள் இருக்கும் நண்பர்கள் அன்பளிப்பாக வழங்கிய டிக்கெட்டுகள். இதனை விற்பனை செய்ய முடியாது. நண்பருக்காக காத்திருந்த நேரத்தில் காவலர் ஒருவர் நாங்கள் கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பதாக எங்களிடம் இருந்த டிக்கெட்டுகளை பறித்து சென்றார். இதனை கேட்டால் அனைத்து காவலர்களும் சேர்ந்து அடிக்க வருகிறார்கள் என அந்த இளைஞர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.