தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை பாஜக என்ற வகையிலும், அரசியல் எதிரி திமுக என்ற வகையிலும் பேசி இருந்தார். மேலும், விஜய் தன்னுடைய உரையில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று கூறியிருந்தார்.
இதனை எதிர்த்து விஜய்க்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் த.வெ.கவினரும், நா.த.கவினரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஆளும் திமுகவில் சிலரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையில் த.வெ.க. சார்பில் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் மக்களுக்கு இலவச உணவு வழங்கி வந்த பூத்தை மாநகராட்சி நிர்வாகிகளும், காவல்துறையினரும் சேர்ந்து அகற்றியுள்ளனர். மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட நேதாஜி சாலை பகுதியில் த.வெ.க. நிர்வாகிகள், விலையில்ல விருந்தகம் என்ற பெயரில் பூத் ஒன்றை அமைத்து மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி விலையில்லா விருந்தகம் பூத்தை மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து அகற்றியுள்ளனர்.
சில அழுத்தத்தின் காரணமாகவே காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விலையில்லா விருந்தகம் பூத்தை அகற்றியுள்ளனர் என்று த.வெ.க.வினர் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பூத் அமைக்கப்பட்டதால் பூத் அகற்றப்பட்டதாகவும் மாநகராட்சி சார்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.