இந்திய தண்டனைச் சட்டம் 294-பி பிரிவின் கீழ் காவல் நிலையங்களில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்படும் நபர், பொது இடத்தில் எந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளைப் பேசினார் என்பதை ‘அப்படியே’ குறிப்பிடுவது வழக்கம்.
அந்த வார்த்தைகளெல்லாம், பெரும்பாலும் அச்சிலேற்ற முடியாத ரகமாகவே இருக்கும். தற்போது, "கரோனா வந்து சாவாய்.." என்று திட்டியதாக, கெட்ட வார்த்தை பட்டியலில், புதிதாக ஒன்றைச் சேர்த்துள்ளனர். சாத்தூர் வட்டம் - இருக்கண்குடி காவல்நிலையத்தில்தான் அப்படியொரு கெட்ட வார்த்தை பேசியதாக வழக்கு பதிவாகியிருக்கிறது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஒருவரின் கணவரும், கிராம ஊராட்சி தலைவர் ஒருவரது கணவரும், தேர்தல் முன்விரோதம் காரணமாக, உள் நோக்கத்துடன் ஆள் பலத்துடன் மோதிக் கொண்டார்கள். அந்த விவகாரத்தை, குழாயடி சண்டையாகச் சித்தரித்து, இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தபோது தான், "கொரோனா'’என்ற புதிய கெட்ட வார்த்தை காவல்துறைக்கு பயன்பட்டிருக்கிறது. இதில், தலா 8 பேர் என இரு தரப்பினரும் கைதான நிலையில், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொடிய தொற்று நோயாக இருக்கும் கரோனா, என்றிலிருந்து கெட்ட வார்த்தையாக புரமோஷன் வாங்கியது. எப்போது அது காவல்துறையினர் அகராதியில் இடம் பெற்றது என்பதுதான் புரியாத புதிராகவே இருக்கிறது.