கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பர்கூர் ஒன்றியம் எலத்தகிரி பகுதியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் 59 வயதான ராஜா மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது. அதேபோல் ஆய்வக உதவியாளர் நடேசன் (59) என்பவர் மற்றொரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் அவர்களது வீட்டில் தெரிவித்த நிலையில் பெற்றோர்கள் இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துப்பூர்வமாக புகாரளித்தனர். தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பள்ளிக்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மாயமான ஆசிரியரையும், ஆய்வக உதவியாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.