Skip to main content

பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - கயத்தாறில் பரபரப்பு!

Published on 07/08/2024 | Edited on 07/08/2024
Police investigating  unidentified woman near Kayathar

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ளது கரிசல்குளம் விலக்கு. இப்பகுதியில் உள்ள தனியார் பிளாட் நிலத்தில் எறிந்த நிலையில், சடலம் ஒன்று கிடப்பதாகவும், அதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுகா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச் செல்வன் தலைமையில் கயத்தாறு போலீசார், விரைந்து வந்தனர்.

அப்போது, கரிசல்குளம் விலக்கு பகுதியில் உள்ள தனியார் பிளாட்டில் எறிந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது. நெருங்கவே முடியாத அளவிற்குள் துர்நாற்றம் வீசியதால், அதிர்ச்சியடைந்த கயத்தாறு போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்க முடிவு எடுத்தனர். இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் ஆம்பூலன்ஸுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடயவியல் நிபுணர்கள் எறிந்த நிலையில் சடலம் கிடந்த இடத்தில் சோதனை செய்து தடயங்களைச் சேகரித்தனர். இதையடுத்து, ஆம்பூலன்ஸ் மூலம் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இதுவரை கைப்பற்றப்பட்ட சடலம் யார்? என்பது தெரியவில்லை. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மீட்கப்பட்டுள்ள சடலம் 15 முதல் 20 நாட்களுக்கு முன்பு வீசப்பட்டு இருக்கலாம் என்றும், இறந்தது 50 வயது மதிக்கத்தக்கப் பெண்ணாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இறந்தது பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? பாதி உடல் எறிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், கொலை செய்து வீசிய மர்ம நபர்கள் யார்? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பாதி எறிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்