செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 45 வயதான இவர் மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி இரவு ராகவேந்திரா நகர் பாலம் அருகே சென்று கொண்டிருந்த வெங்கடேசனை மர்ம நபர்கள் சிலர் சுற்றி வளைத்தனர். காரணம் தெரியாமல் திகைத்து நின்ற வெங்கடேசன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் கீழே சரிந்து விழுந்தார். அப்போது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசனை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து இருசக்கர வாகனங்கள் மூலம் தப்பியோடிவிட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைத்து கொலை கும்பலை கண்டுபிடிப்பதற்காக தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மணிமாறன், மோகன்ராஜ், தனுஷ் உட்பட 10 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்தாண்டு மாடம்பாக்கம் ஏரிக்கரை அருகே முகமது இஸ்மாயில் மற்றும் இமாம் அலி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வெங்கடேசனை கொன்று, தங்கள் பகையைத் தீர்த்துக்கொண்டோம். மேலும், கொலைக்குப் பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகளை யூடியூப் பார்த்து தான் தயாரித்தோம் என குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரில் மூன்று பேருக்கு கையும், ஒருவருக்கு காலும் உடைந்தது. போலீசார் விரட்டிச் செல்லும் போது குற்றவாளிகள் கீழே விழுந்ததில் அவர்களது கை, கால்கள் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்தாண்டு அரங்கேறிய இரட்டைக்கொலைக்குப் பழி தீர்ப்பதற்காக ஊராட்சி மன்றத் தலைவரை நடுரோட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.