கிருஷ்ணகிரியில் நகை திருட்டில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த பலே திருடனை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மோகன். கடந்த 15ம் தேதி மர்ம நபர்கள் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர். மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவத்தில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி சதீஸ்குமார் (25) ஈடுபட்டு இருப்பதும், கோவா மாநிலத்தில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து கோவா விரைந்த தனிப்படையினர், சதீஸ்குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், ஏற்கனவே கிருஷ்ணகிரி பெரிய மோட்டூரில் சிவக்குமார் என்பவர் வீட்டில் 18 பவுன் நகைகள், பழைய பேட்டையில் அம்மு என்பவர் வீட்டில் 5 பவுன் நகைகள், காவேரிப்பட்டணத்தில் தனலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகைகள் என மொத்தம் 30 பவுன் நகைகளைத் திருடியிருப்பது தெரிய வந்தது. திருடிய நகைகளை சதீஸ்குமார் அவருடைய நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்ரம், அப்பு என்கிற விமல் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்ததை தனிப்படை காவல்துறையினர் கண்டறிந்தனர். சதீஸ்குமார் மற்றும் அவருடைய நண்பர்களிடம் இருந்து 32 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள 80 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருடிய நகைகளை கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, அதில் கோவாவுக்கு அடிக்கடி ஜாலியாக சுற்றுலா செல்வதை சதீஸ்குமார் பொழுதுபோக்காக வைத்திருப்பதும் தெரிய வந்தது. திருட்டுச் சம்பவத்தில் பெரும்பாலும் ஒற்றை ஆளாக களமிறங்கும் சதீஸ்குமார், திருடிய நகைகளை பாதுகாப்பாக வைத்திருந்த நண்பர்களுக்கும் மோட்டார் சைக்கிள், செல்போன் எனக் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து குஷிப்படுத்தியுள்ளார் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். இதையடுத்து சதீஸ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.