ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் இணையத்துக்கு உட்பட்ட ஒரு வீட்டில் திருடிய வழக்கில் செந்தில்குமார்(30), கருப்புசாமி (31), பாலசுப்ரமணி (42) ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு திட்டங்களை வகுத்து கொடுத்தது ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் ராஜீவ் காந்தி (35) எனத் தெரிய வந்தது.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் செந்தில்குமார் ஏற்கனவே பெருந்துறையில் 2021ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீஸ்காரர் ராஜீவ் காந்தி சென்றார். அப்போது செந்தில்குமார் உடன் நட்பை ஏற்படுத்தி சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் தன்னை சந்திக்குமாறும் போலீசில் சிக்காமல் திருட்டு வழிப்பறியில் ஈடுபடத் திட்டம் வகுத்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி ஜாமீனில் வெளிய வந்த செந்தில்குமார் கூட்டாளிகளுடன் சென்று போலீஸ்காரர் ராஜீவ் காந்தியை சந்தித்துள்ளார். அப்போது போலீஸ்கார் ராஜீவ்காந்தி பெருந்துறையில் அவருக்கு சொந்தமான மளிகை கடையில் செந்தில்குமார் மற்றும் அவரின் கூட்டாளிகளை வேலைக்கு சேர்த்து விடுவது போல் சேர்த்துவிட்டு திருடுவதற்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். அதன்படி செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சித்தோடு, பெருந்துறை, திருப்பூர் என பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர். இதனை அடுத்து போலீஸ்காரர் ராஜீவ் காந்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தற்போது ராஜீவ் காந்தி கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கடந்த 2009 முதல் 2020 ஆம் ஆண்டு வரை திருப்பூரில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். பணிபுரிந்த காலத்தில் பல குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் இருந்ததால் அவர் அடுத்தடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெருந்துறை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு முதன்மை காவலராக பணிபுரிந்தார். அதன் பின்னர் அவர் ஈரோடு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். திருப்பூரில் அவிநாசி சப்-டிவிஷனில் பெருமாநல்லூர், குன்னத்தூர், அவிநாசி ஈரோட்டில் சித்தோடு, பெருந்துறை என 7 திருட்டு வழக்கில் ராஜீவ்காந்திக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.