Skip to main content

ஃபேஸ்புக் மூலம் நிதி திரட்டி காவலர் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன். இவரது மனைவி மேரி எமரென்சியா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அதில் மகன் மணிஷ் பால், 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். மகள் சிமோனா ஆன்டோனி ரோஸ் பீட்டர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.

 

police - facebook

 



இந்நிலையில் 04.02. 2020 அன்று இரவு பணியில் இருந்த மனோகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பதாக இரவு பணியில் இருந்த சககாவலரான ஞானமூர்த்தி என்பவரிடம் தெரிவித்துள்ளார், உடனே ஞானமூர்த்தி அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் மேல் சிகிச்சைக்கு பாண்டிச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். 

இத்தகவல் முதுநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆகாச மூர்த்தி என்பவருக்கு  தெரிவிக்கப்பட்டு,  மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோகரனுக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் என கூறினர். அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ செய்யப்பட்டது, பின்பு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றொரு ரத்த குழாயில் அடைப்பு உள்ளதாக தெரிவித்தனர். 

 



அதனை சரிசெய்ய ரூபாய் ஒன்றரை லட்சம் ஆகும் எனவும் கூறினர். இவ்வளவு தொகையினை அவரின் மனைவியினால் உடனடியாக தயார் செய்ய முடியவில்லை. இத்தகவல் கடலூர் உட்கோட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, கடலூர் முதுநகர் ஆய்வாளர் பால் சுதருக்கு தெரிவிக்கப்பட்டது. 

அவர்களின் அறிவுரையின்படி காவலர்கள் தங்களால் முடிந்த உதவியினை செய்யுமாறு ஃபேஸ்புக்கில் வங்கி கணக்கு எண்ணுடன் பதிவு இடப்பட்டது. இதனைப் பார்த்த காவலர்கள் தங்களால் முடிந்த உதவியினை பணமாக நேரிலும், வங்கி கணக்கிலும் செலுத்தினர். மருத்துவ செலவுக்கு தேவையான தொகையினை  துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று மனோகரனின் மனைவியிடம் கொடுத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். தற்பொழுது மனோகரன் மருத்துவ சிகிச்சை முடித்து நல்ல நிலைமையில் உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்