விடுதியில் தரமான உணவுகளை வழங்கக்கோரி ஒரகடம் அருகே போராட்டத்தைத் தொடர்ந்த ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் நேற்று (17/12/2021) இரவு முதல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கணேசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திக் கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்த நிலையில், அங்கு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் நிறைவுற்ற நிலையில், ஒரகடத்தில் மட்டும் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது.
அந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி உறுதிமொழிகளை ஏற்பது பற்றி உடன்பாடு ஏற்பட்டதை எடுத்துரைத்தார். எனினும், விடுதியில் தரமான உணவு வழங்கக்கோரி தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது.
மறியலை கைவிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் விடுதிக்கு திரும்பினர். மற்றொரு பிரிவினர் போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில், அவர்களை வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.