Published on 09/05/2020 | Edited on 09/05/2020
கரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும், ஊரடங்கு முழுமையாக ரத்து செய்யப்படும் வரை கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அப்போதெல்லாம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது. ஆனால் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை 393 ஆக உள்ள நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படும் என மாவட்ட மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் நாளை முழு ஊரடங்கு இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
"அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகளை திறக்கலாம், பொதுமக்களும் சமூக விலகலை கடைப்பிடித்து, முகக் கவசத்துடன் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம்" என அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி சிவப்பு மண்டலமாக உள்ள நிலையில், முழு ஊரடங்கு இல்லை என அறிவித்துள்ளது அரசு. மதுக்கடை திறந்து சமூக இடைவெளி கேள்விக்குறியானதால் மக்களின் கேள்விக்கு ஆளாக நேரிடும் அல்லது உச்சநீதிமன்றத்தில் மதுக்கடை திறக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் முழு ஊரடங்கு கேலிக்குரியதாகிவிடும் என்பதால் முழு ஊரடங்கினை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளதோ எனும் ஐயம் எல்லோரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.