Skip to main content

காவல்துறையைக் கைப்பொம்மையாகப் பயன்படுத்துகிறது இந்த அரசு! -பட்டியலிடுகிறார் கொ.ம.தே.க. ஈஸ்வரன்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

E.R.Eswaran

 

"ஆளுங்கட்சியினர் சொல்வதைக் காவல்துறையினர் அப்படியே கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் தான் சாத்தான்குளம் இரட்டைக் கொலை போன்ற நிகழ்வுகளுக்கான காரணம். இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற அரசு முயற்சிக்கக்கூடாது." எனக் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R. ஈஸ்வரன் கூறியிருக்கிறார். இது சம்பந்தமாக விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அதில்,

 

"சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கொலை செய்தவர்களை அரசு காப்பாற்ற முயற்சிப்பதைப் பார்த்தால் ஆளுங்கட்சிகாரர்களுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளுக்கு மருத்துவரும், நீதிபதியும், சிறைத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்புக் கொடுத்திருப்பதைப் பார்த்தால் இதன் பின்னணியில் அதிகாரம் படைத்தவர்கள் இருப்பது தெளிவாகிறது.

 

10 நாட்களாகியும் கொலை செய்தவர்களை தமிழக அரசு கைது செய்வதற்குத் தயக்கம் காட்டுகிறது என்றால் கொலைக்கான தடயங்களை அழிப்பதற்குக் கால அவகாசம் கொடுப்பதாகவே தோன்றுகிறது. சாமானிய மக்களே தடயங்களை அழித்து விடுவார்கள் என்று சொல்லி பிணையில் கூட வர முடியாதபடி சிறையில் அடைப்பது காவல்துறையின் வழக்கம். இதுபற்றி முழு விபரங்களும் தெரிந்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை வெளியில் விட்டு வைத்திருப்பது தடயங்களை அழிப்பதற்காக இல்லாமல் வேற எதற்காக இருக்க முடியும்.

 

அனைத்துக் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையின் பல்வேறு உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகிய எல்லோருமே சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென்று வற்புறுத்தியும் கைது செய்யவிடாமல் தடுக்கின்ற அந்த உச்சகட்ட அதிகாரம் படைத்தவர்கள் யார் ?. காவல்துறை அதிகாரிகள் ஆட்சியில் இருப்பவர்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்யக் கூடியவர்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.

 

ஏனென்றால் அவர்களுடைய இடமாறுதல்களாக இருந்தாலும், பதவி உயர்வாக இருந்தாலும் அதிகாரம் படைத்த ஆளுங்கட்சிகாரர்களை நம்பிதான் இருக்கிறது. அதிகாரிகளுடைய தனிப்பட்ட குணங்களை வைத்து இதில் கொஞ்சம் மாறுபாடும் உண்டு. ஆளுங்கட்சிக்கு ஒத்துப்போகாத அதிகாரிகள் எந்த அதிகாரமும், உபயோகமும் இல்லாத பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். ஒரு சில அதிகாரிகள் அதிகார மையத்திற்கு தலையாட்டுபவர்களாக இருந்தாலும் சில சட்ட சிக்கல்களை எடுத்துச்சொல்லி தவறுகள் நடக்காமல் தடுக்கிறார்கள்.

 

ஆனால் ஒரு சில அதிகாரிகள் தவறு என்று தெரிந்தும் ஆட்சியாளர்கள் சொல்வதை அப்படியே கேட்கிறார்கள். சாத்தான்குளம் உயிரிழப்புகள் விசாரணையை அதிகாரிகளோடு நிறுத்திக் கொள்ளாமல் இவ்வளவு தைரியத்தைக் கொடுத்து இன்று காப்பாற்ற துடிக்கின்ற அதிகார மையம் யார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்த  வேண்டும்.

 

தமிழக அரசு காவல்துறையைக் கை பொம்மையாக எப்படிப் பயன்படுத்துகிறது என்பதற்கான சில உதாரணங்களையும் கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

 

1. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதிக்குள் நடந்த பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்யக் கூடாது என்பதற்காக தன் அடியாட்களோடு நாமக்கல் பயணியர் விடுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் அவர்களை தாக்க முயற்சிக்கிறார்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் புகார் கொடுத்த போது நாமக்கல் மாவட்ட காவல்துறை அந்த நிகழ்வுக்குச் சிறிது நேரம் முன்பாக நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாக பொய் வழக்குப் போட்டிருக்கிறது.

 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் என்ன நிலை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்ட காவல்துறை ஆளுங்கட்சிக்காரர்களுடைய அறிவுறுத்தல் இல்லாமல் தன்னிச்சையாக மனசாட்சியோடு இந்தப் பொய் வழக்கைப் போட வாய்ப்பில்லை.

 

2. நக்கீரன் கோபால் அவர்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆளுங்கட்சிக்காரர்களின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்டார். முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றம் விடுவித்தது.

 

3. ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் தீவிரவாதியைப் போல் கைது செய்வது போல விடியற்காலையில் கைது செய்து பிணையில் வர முடியாதபடி சிறையில் தள்ள முயற்சித்தார்கள். நீதிமன்றம் பிணையில் விடுவித்தாலும் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று அரசு தரப்பில் பலத்த முயற்சிகளைச் செய்தார்கள்.

 

4. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து பழிவாங்க முயற்சித்தார்கள். நீதிமன்றம் முன்ஜாமீன் கொடுத்தது.

 

5. டாஸ்மாக் கடைகள் அடைப்பதற்கு எதிரான போராட்டங்களின் போது மனிதாபிமானமற்ற முறையில் பெண்கள் உட்பட சாமானிய மக்களைத் தாக்கிய பல அதிகாரிகள் காப்பாற்றப்பட்டனர்.

 

6. பொள்ளாச்சி பாலியல் வழக்கை நீர்த்துப் போவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தார்கள்.

 

7. இதேபோல கரோனா காலத்திலும் அரசுக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளைச் சொன்ன பலபேர் மிரட்டப்பட்டு தங்களுடைய கருத்துகளை மாற்றி சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

 

இன்னும் இதைப்போல பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

நடந்த நடப்புகளைப் பார்க்கும் போது சாத்தான்குளம் இரட்டைக் கொலை ஆட்சியாளர்களுடைய ஆதரவு இல்லாமல், அறிவுறுத்தல் இல்லாமல் காவல்துறை அதிகாரிகள் மட்டுமே செய்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தமிழக முதலமைச்சர் இருவரும் உடல் உபாதைகளால் இறந்தார்கள் என்று பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கொலைக்கான முகாந்திரம் இருக்கிறது என்று நீதிமன்றம் முடிவு செய்த பின்னால் முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன?. தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வரலாற்றிலேயே முதல்முறையாக வருவாய்த்துறையிடம் ஒப்படைத்ததற்கு தமிழக அரசினுடைய பதில் என்ன?. சாத்தான்குளம் போன்ற நிகழ்வுகள் திரும்ப நடக்கக் கூடாது என்பதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?. தமிழகத்தில் சாமானிய மக்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்பது நடக்கின்ற நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

 

இது சட்டத்தின் ஆட்சியிலிருந்து சர்வதிகார ஆட்சியை நோக்கி பயணிக்கின்ற பாதையாக மாறி இருக்கிறது. 1991 லிருந்து 96 வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியை இது நினைவுபடுத்துகிறது. பதிலடி கொடுக்க 1996-ஆம் ஆண்டைப் போல பொதுமக்கள் தயாராக வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்