சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரியப் பாதுகாப்பும், மருத்துவ வசதியும் செய்து தரத் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் இந்த சம்பவம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகம் வருகை புரிந்துள்ளனர்.
இதன்மூலம் இருவரும் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் முதற்கட்டமாக இன்று (30.12.2024) விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக ஆளுநரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவியிடம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் இரண்டாவது நாளாக நாளையும் (31.12.2024) இது தொடர்பாக விசாரணை நடைபெறும் எனத் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்துள்ளார்.