கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள ஆதாண்டார்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன்(56). கடந்த 30ஆம் தேதி இவர், இருசக்கர வாகனத்தில் நெய்வேலியில் தனது வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தனசேகரனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 12,000 பணம் மற்றும் அவர் வைத்திருந்த செல்போன் ஆகியவற்றை பிடுங்கிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தனசேகரன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் நேற்று, வடலூர் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மது போதையில் அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்துள்ளனர். அதோடு அவர்கள், அந்த பகுதி வழியாக சென்று ஒரு பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரின் தாலி செயினை பறித்துள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், செயினை திருடிய இருவரையும் பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். ஆனாலும், மக்கள் விடாமல் துரத்திச் சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது அதில் ஒரு இளைஞர் தப்பி ஓட ஒருவரை மட்டும் பிடித்துள்ளனர். பிடிபட்டவரை அங்கிருந்த மக்கள் தர்ம அடி கொடுத்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு பிடிபட்ட திருடனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் புதுச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மௌலி என்பதும், தப்பி ஓடிய நபர் அஜித்(22) என்பதும் தெரிய வந்தது. மேலும், கடந்த 30ம் தேதி தனசேகரனிடம் இவர்கள் தான் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல், மௌலி மீது ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, சேத்தியாதோப்பு, சோழபுரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மௌலி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பிய அஜித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.