காவல்துறையிடம் அளித்த உறுதிமொழி பிரமாணப்பத்திரத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபருக்கு சுமார் 343 நாட்கள் சிறை தண்டனை.
அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வருண்(21) என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு கடந்த 02.12.21 தேதியன்று ஆஜர் செய்து, ஒரு வருட காலத்திற்கு குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தார்.
மேலும் 20.01.22-ம் தேதி பணம் பறிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நன்னடத்தை நிபந்தனைகளை மீறியதற்காக 29.01.22-ம் தேதி நிர்வாக செயல்துறை நடுவர் விசாரித்தார். அதில் நன்னடத்தையில் இருந்த காலத்தைத் தவிர மீதியுள்ள 307 நாட்கள் சிறை தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வருண் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சக்திவேல்(38) பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு கடந்த 07.01.22 தேதியன்று ஆஜர் செய்து, ஒரு வருட காலத்திற்கு குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், அவர் மீது 23.01.22-ம் தேதி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே உறுதிமொழி பிரமாணப் பத்திரத்தில் கொடுத்த நன்னடத்தை நிபந்தனைகளை மீறியதால், 29.01.22-ம் தேதி நிர்வாக செயல்துறை நடுவர் விசாரித்து நன்னடத்தையில் இருந்த காலத்தைத் தவிர மீதியுள்ள 343 நாட்கள் சிறை தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சக்திவேல் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.