முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காவல்துறையினரின் தடையை மீறி நடத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதன், நினைவு தினத்தையொட்டி, மே 17 இயக்கம் சார்பாக, சென்னை பெசன்ட் நகரில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு காவல்துறையினர் அனுமதி தராததால், தடையை மீறி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது தடையை மீறி கூட்டம் நடத்த முயன்றதாக சாஸ்திரி நகர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, "கடந்த ஆண்டுகளில் மிக அமைதியாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதைத் தடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.