விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது ஈச்சங்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பிளஸ்-1 படித்து வரும் மாணவி ஒருவர் இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தன்னுடைய பெரியம்மாவின் ஆதரவில் படித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு வரை புதுச்சேரியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஈச்சங்குப்பம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து பிளஸ் 1 வகுப்பில் படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெரியம்மா குப்பு சிறுமியை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
அங்கு சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதை அவரது பெரியம்மா குப்புவிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குப்பு உடனடியாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சிறுமி கர்ப்பிணியானது தொடர்பாக தீவிர விசாரணை செய்தனர். அதில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெரியம்மா, குப்புவின் மகன் 32 வயது மோகன், அதே கிராமத்தைச் சேர்ந்த 77வயது முதியவர் மண்ணாங்கட்டி என்கிற வெங்கடேசன், 28 வயது இளையராஜா ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவலையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார். காவல் அதிகாரிகள் பலரும் அடுத்தடுத்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதே போல் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியை போலீசார் விழுப்புரம் அரசு காப்பகத்தில் கொண்டு சென்று சேர்த்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமான விசாரணையை செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி உயரதிகாரிகள் மாற்றம் செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று காலை அவர் விழுப்புரம் காப்பகத்தில் இருந்த அந்த பள்ளி மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். அவரது விசாரணையை தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட மோகன், மண்ணாங்கட்டி, இளையராஜா, மூவருடன் சேர்த்து பாபு , பிரபு, சத்யராஜ், ஏழுமலை, ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
விசாரணை முடிவில் மாணவியின் பாலியல் வழக்கில் எட்டுப்பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து யாருக்கும் தெரியாமல் மறைத்ததாக மாணவியின் பெரியம்மா குப்பு மீதும் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்துள்ளனர். இதனால் பள்ளி மாணவி பாலியல் வழக்கு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பள்ளி மாணவியை ஈவு இரக்கமின்றி கொடுமை செய்த கும்பலில் அவரது உறவினரே சம்பந்தப்பட்டிருப்பது மேலும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.