
திருச்சியில் பள்ளி சிறுமிக்கும் அவரது தாயாருக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த முன்னாள் கவுன்சிலர் மகனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது நவல்பட்டு அண்ணா நகர் பகுதி. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவருக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவந்த கோகுல் என்ற மாணவருடன் 2019ஆம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இவர்களின் நட்பானது காதலாக மாறி அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி கோகுல், சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து இருப்பதாகவும், இதனால் உடனடியாக நான் சொல்லும் இடத்திற்கு நீ வரவேண்டும் எனவும் கூறியுள்ளான்.

கோகுலின் பேச்சை நம்பி தனியார் விடுதியில் கோகுல் தங்கியிருந்த அறைக்கு சென்ற மாணவிக்கு ஹோட்டல் அறையிலேயே வைத்து கோகுல் தாலி கட்டியுள்ளான். அதன்பிறகு அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து பலமுறை இவ்வாறு தனியே கூப்பிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மாணவி கோகுல் என்பவரை காதலிப்பதாக அவருடைய தாயிடம் கூறியதால் கோகுல் குறித்து சிறுமியின் தாயார் விசாரித்தார். அப்பொழுது கோகுல் வேலூர் மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் மகன் என்பது தெரியவந்தது. இருவரையும் அழைத்து மாணவியின் தாய் எச்சரித்த நிலையில், சில நாட்கள் கழித்து சிறுமியின் தாய்க்கு செல்போனில் அழைத்த கோகுல், தனக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும், பணம் தரவில்லை என்றால் உங்கள் மகளுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளான்.

தன்னிடம் பணம் இல்லாததாக மாணவியின் தாய் மறுத்த நிலையில், பணம் இல்லை என்றால் பரவாயில்லை தான் கூப்பிடும் இடத்திற்கு வருமாறு தவறான நோக்கத்துடன் சிறுமியின் தாயுடனும் பேசியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத மாணவியின் தாய் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்த மாணவி தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அழிக்கப்பட்டது.