மதுரையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆசிரியை ஒருவர் அவரது மகனுடன் வசித்து வந்தார். இவருடன் வீரமணி என்ற நபர் பழகி வந்தார். இந்நிலையில் தன்னிடம் டியூசன் பயில வந்த இரண்டு மாணவர்களுக்கு ஆசிரியையும், வீரமணியும் பாலியல் தொல்லை கொடுத்ததோடு அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என ஆசிரியையும், வீரமணியும் மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் ஒன்றை அளித்தனர். அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியையிடமும், வீரமணியிடமும் விசாரணை செய்த போலீசார் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை உறுதி செய்தனர். பின்னர் ஆசிரியையும் வீரமணியையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.