பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை கடந்த 21 ஆம் தேதி சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கினார். இதன் 4வது நாள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது, “ஆதி இசை தமிழ் இசை. 103 பன்களைக் கொண்டது தமிழ் இசை. எந்த ஒரு மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு இருக்கிறது. தமிழ்மொழி அழிவதற்கு நாம்தான் காரணமாக இருக்கிறோம். தமிழில் படித்தால், தமிழில் பேசினால் கேவலம் என்று நினைக்கிறோம். ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அது அறிவுசார் மொழி அல்ல. தமிழைப் போன்ற ஒரு மொழி உலகில் இல்லை. உலகின் மிக மூத்த மொழி தமிழ் மொழி. 5 ஆயிரம், 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் மூலநூல் அகத்தியம். அவ்வளவு பெருமை வாய்ந்த பழைய மொழி தமிழ் மொழி. தமிழ்நாட்டில் தமிழ் மொழியை நாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம். தமிழ் வாழ்க. தமிழ் வளர்க என்று சொல்கிறோம். ஆனால் தமிழ்தான் இல்லை.
பாடங்களில் ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்றுக் கொடுங்கள். மற்ற பாடங்களை தமிழிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் பேசுவது, உரையாடுவது எதுவும் தமிழே இல்லை. அது கலப்பு மொழி. ஆங்கிலம் பேச வேண்டுமானால் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். ஆனால் அதில் தமிழை கலந்து பேசாதீர்கள். தமிழ் ஒரு கலப்பு மொழி அல்ல. புலவர்கள் அறிஞர்கள் வீட்டிலேயே தமிழ் இல்லை. அதனால் தமிழறிஞர்கள் தங்களுக்கு தாங்களே அபராதம் விதித்துக் கொள்ள வேண்டும். ஒரு வாக்கியத்தை சொல்வதற்கு நாம் 8 மொழிகளை பயன்படுத்துகிறோம். குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தாய்மொழி. அந்த குழந்தை மனவளர்ச்சியோடு வளர தாய்மொழி அவசியம். தாய்மொழி தெரியாதவர்கள், தாய்மொழியை பேசாதவர்களை பேடி என காந்தியடிகள் விமர்சித்திருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டது. அதன் பிறகு இளைஞர்கள் மாணவர்கள் ஒன்றிணைந்து தேங்க்யூ என்ற ஆங்கில வார்த்தையை அனுப்புவதற்காக ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தி, தங்களது வாக்கியமான மெர்சி என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கினார்கள். நாம் 100 வார்த்தை பேசினால் அதில் 90 வார்த்தைகள் கலப்பு மொழியாக இருக்கிறது. மற்ற 10 வார்த்தைகளும் கொச்சைத் தமிழாகத்தான் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேசுவதுதான் நாகரிகம் என்று நினைத்து நாம் அதற்கு அடிமையாக இருக்கிறோம். திரைப்படம், கோயில், திருமணம் போன்ற எதிலுமே தமிழ் இல்லை. தமிழ் யார் வீட்டிலாவது இருக்கிறது என்று சொன்னால் சொல்லி அனுப்புங்கள். நான் அவரது வீட்டிற்கு வந்து தேநீர் அருந்துகிறேன். தேசிய அட்டவணையில் உள்ள 18 மொழிகளிலும் அழைப்பிதழ் தயார் செய்து மாநாடு நடத்தினோம். பன்மொழிப் புலவர் அப்பாதுரை என்பவர் பல மொழிகளை படித்தவர். அதுபோல் பல மொழிகளை யார் வேண்டுமானாலும் படியுங்கள். ஆனால் அன்னை மொழியை மறக்காதீர்கள். மெல்ல தமிழ் இனி சாகும் என பாரதியாரின் நண்பர் கூறியபோது பாரதியார் கோபமடைந்தார். ஆனால் இன்றைக்கு தமிழ் வேகமாக செத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் தமிழைத் தேடி எனது பயணம் தொடங்கியுள்ளது. தமிழை மீட்டெடுப்போம்” எனப் பேசினார்.