பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை ‘தமிழைத் தேடி..’ எனும் பயணத்தை சென்னை முதல் மதுரை வரை நடத்தினார். இந்நிலையில் ராமதாஸ், தமிழைத் தேடி திட்டத்தில் அடுத்ததாக செய்ய வேண்டியவை குறித்து வணிகர்களுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது; உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21ஆம் நாள் சென்னையில் தொடங்கி பிப்ரவரி 28ஆம் நாள் மதுரையில் நிறைவு செய்த ‘தமிழைத் தேடி...’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் தமிழ்கூறும் நல்லுலகில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்தேனோ, அதை விட பல மடங்கு ஆக்கப்பூர்வமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அன்னைத் தமிழைக் காப்பதற்காக நமக்கு நாமே நிர்ணயித்துக் கொண்டிருக்கும் இலக்கு என்பது மிகப்பெரியது என்பதால், இதுவரை அடைந்த வெற்றிகளை நினைத்து ஓய்வெடுக்க நேரமில்லை. எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்ற நமது இலக்கின் அடுத்தடுத்த எல்லைக்கற்களை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. அதுகுறித்து நினைவூட்டுவதற்கே இந்த மடல்.
சென்னையிலிருந்து மதுரைக்கு எட்டு நாள்கள் பயணம் மேற்கொள்வதால் மட்டுமே அனைத்தும் சரியாகி விடும் என்ற மூட நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டிய தேவை உள்ளது; அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சொற்களில் பெரும்பாலானவை தமிழ் இல்லை என்பதையே தமிழ்மக்கள் இன்னும் உணரவில்லை; தனித்தமிழ்ச் சொற்கள் எவை? என்பதே நம்மில் பலருக்கு தெரியவில்லை; தனித்தமிழில் உரையாடுவது தகுதிக்குறைவு அல்ல... மாறாக அதுவே தனித்தகுதி என்பன உள்ளிட்ட உண்மைகளை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பது தான் எனது பயணத்தின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, நாம் பயன்படுத்துவது தமிழ் அல்ல.... தனித்தமிழ் பயன்பாட்டை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழைத்தேடி பயணத்திற்கு இதைவிட வேறு என்ன வெற்றி தேவை?
அடுத்தக்கட்டமாக நாம் செய்ய வேண்டிய பணிகள் மூன்று உள்ளன. அவற்றை முழு மனதுடன் செய்து முடிப்பது தான் அன்னைத் தமிழுக்கு நாம் செய்ய வேண்டிய முதன்மையான பணி ஆகும்.
முதல்கட்டமாக மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவிலும் தமிழைத்தேடி இயக்கத்திற்கு பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை வாயிலாக நடத்தப்படும் தமிழைத்தேடி இயக்கம் அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தி இருக்கிறேன். இந்த இயக்கம் தொடர்ந்து அரசியல் சார்பற்றதாகவே செயல்படும். அதற்கேற்ற வகையில், தமிழைத்தேடி இயக்கத்திற்கு ஒவ்வொரு நிலையிலும் 10 பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். அவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்களாகவும், தமிழைப் பரப்புபவர்களாகவும் இருக்க வேண்டும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அன்னைத் தமிழ் மீதான நமது பற்று எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளே சான்று. 99 விழுக்காடு கடைகளின் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலும், பிறமொழிச் சொற்களிலுமே எழுதப்பட்டிருக்கின்றன. இதை வணிகர்களின் குற்றமாகக் கருத முடியாது. மாறாக, எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள், எவையெல்லாம் பிறமொழிச் சொற்கள் என்ற வேறுபாட்டை அவர்கள் அறியாதது தான் தனித்தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்படாததற்கு காரணம் ஆகும்.
இவற்றையெல்லாம் விளக்கி வணிகர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். வணிகர் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கும் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வெகுவிரைவில், 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் நாள் தமிழ்நாடு அரசு பிறப்பித்த 575 எண் கொண்ட அரசாணையில் இடம்பெற்றுள்ள கூறுகளின் அடிப்படையில் பெயர்ப்பலகைகளை மாற்றி அமைக்க வணிகர் சங்க பொறுப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது குறிப்பிடப்பட வேண்டிய முன்னேற்றம் ஆகும்.
அடுத்தக்கட்டமாக, கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்ற வேண்டியதன் தேவையை ஒவ்வொரு வணிகரும் உணரச் செய்ய வேண்டும். அந்தப் பணியை நீங்கள் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வணிகர்களுக்கு வழங்குவதற்கான துண்டறிக்கை கட்சித் தலைமையால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை ஒவ்வொரு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூருக்கு தேவையான எண்ணிக்கையில் அச்சிட்டு, ஒவ்வொரு கடைக்கும் சென்று வழங்க வேண்டும்; பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க வேண்டியதன் தேவை பற்றி விளக்க வேண்டும். அது குறித்த விவரங்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
மூன்றாவதாக, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களில் எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள், எவையெல்லாம் பிறமொழிக் கலப்புச் சொற்கள் என்பதை நமது மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே, கடந்த 20.03.2005-ஆம் நாளில் சென்னையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பிறமொழிக் கலப்புச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை தெரிவிக்கும் பலகைகளை நாம் அமைத்தோம். இப்போது அந்த பணியை நாம் மீண்டும் செய்ய வேண்டியுள்ளது. தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் அத்தகைய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க. பொறுப்பாளர்கள் அத்தகைய பலகைகளை தங்களின் பகுதியில் அமைக்க வேண்டும். அந்த பலகைகளின் திறப்பு நிகழ்வை அனைவரும் அறியும் வகையில் எளிதாக நடத்த வேண்டும். இயன்ற இடங்களுக்கு நானே நேரில் வந்து பலகைகளைத் திறந்து வைக்க அணியமாக இருக்கிறேன்.
பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுக்கு வழங்கியுள்ள இந்த 3 பணிகளும் மிகவும் எளிமையானவை. நீங்கள் செய்யும் இந்த பணிகள் தமிழன்னைக்கு செய்யும் தொண்டு ஆகும். இந்தப் பணியை நீங்கள் செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்; உங்களை வெகுவாக பாராட்டுவேன். நீங்கள் செய்யும் இந்த பணி, தமிழைத் தேடி பயணத்தால் எனக்கு ஏற்பட்ட களைப்பை போக்கும். ஆகவே, பாட்டாளி சொந்தங்களே... அனைவரும் ஒன்றுபடுவோம், அன்னைத் தமிழைக் காக்கும் பணியைச் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.