ஸ்டெர்லைட்டை விட ஆபத்தானது என்.எல்.சி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளர்.
என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பாமக இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சியால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். என்.எல்.சி கடலூருக்கு வரும் முன் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளது. மத்திய அரசு என்.எல்.சியை 2025 ஆம் ஆண்டுக்குள் தனியாரிடம் ஓப்படைக்கவுள்ளோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அப்படி தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த பின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு வேகமாக நிலங்களை கையகப்படுத்துவது ஏன்? உலகம் முழுவதும் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
என்.எல்.சியால் காற்று மாசடைந்து ஆஸ்துமா உள்ளிட்ட நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு விவசாய அமைச்சர் என்றால் விவசாயி பக்கம்தான் நிற்க வேண்டும், ஆனால் அதற்கு மாறாக நம் தமிழக விவசாய அமைச்சர் விவசாய நிலங்களை பிடுங்கி என்.எல்.சியிடம் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுனீர்கள். அதை விட 100 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்.எல்.சியை மூடாமல் இருக்கிறீர்கள். எல்லாவற்றிலும் மத்திய அரசை எதிர்க்கும் திமுக ஏன் என்.எல்.சி விவகாரத்தில் மட்டும் ஆதரவாக இருக்கிறது” என்றார்.