
ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு திட்டத்தை டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாகை மாவட்டத்தில் காவிரிப்படுகை எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடு முழுவதும் இயற்கை எரிபொருட்களை ஊக்குவிக்கும் நேரம் இது. மாற்று எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிக்க சூரிய மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. எல்.இ.டி. பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத் தேவை குறைக்கப்பட்டு வருகிறது. சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்கள் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கின்றன. இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு மாற்று எரிசக்தி வழிகள் பெரிதும் உதவுகின்றன. இயற்கை எரிவாயுவை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் உள்நாடு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் எத்தனால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கரோனா காலத்திலும் தொழில் வளர்ச்சிக்கு நிறைய ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டது. எளிய முறை, மனித சக்தி, தடையற்ற மின்சாரத்தால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. எண்ணெய், இயற்கை எரிவாய திட்டங்களால் அந்தந்த பகுதிகளில் வளர்ச்சி ஏற்படும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.