பிளஸ்2 மாணவர் குத்திக்கொலை
திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் கார்த்திகேயன் (17) இவர் அங்குள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தாய் சாந்தி மாநகராட்சி துப்புரவு பணியாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கார்த்திகேயன் அருகில் உள்ள நண்பன் ரியாஷ்ராஜை சந்திக்கச்சென்றார். ரியாஸ்ராஜ் வீட்டில் இல்லாததால் அவரது தம்பி ஹரீசுடன் பேசிவிட்டு தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். வழியில் யாரும் குடியிருக்காத வீட்டு வாசலில் கார்த்திகேயன் சிறுநீர் கழித்துள்ளார். இதை ரியாஷ்ராஜின் மாமா லட்சுமணன் (30) கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்து சென்ற கார்த்திகேயன், மீண்டும் இரவு 11 மணியளவில் ரியாஷ் வீட்டிற்கு வந்தபோது ஆத்திரத்தில் இருந்த லட்சுமணன், தகராறில் ஈடுபட்டு கத்தியால் கார்த்திகேயனை குத்தினார். இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தியின் உறவினர்கள், லட்சுமணனின் வீட்டை அடித்து நொறுக்கினர். புகாரின்பேரில் பொன்மலை போலீசார் லட்சுமணன், ரியாஷ்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.