
விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டி சேர்ந்தவர் கருப்பசாமி. லாரி டிரைவர். இவரது மகள் முத்து கௌசல்யா (17) இவர் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், குளத்தூர், சூரன்குடி, வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றும் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மழை பெய்ய தொடங்கிய போது வீட்டின் அருகே காய வைத்திருந்த மிளகாய் பழத்தை மாணவி முத்து கௌசல்யா அள்ள சென்றுள்ளார். அப்போது இடி மின்னல் தாக்கியதில் மாணவி முத்து கௌசல்யா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவி முத்து கௌசல்யா சடலத்தை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி