சென்னை திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் 11 ஆம் வகுப்பு படிக்கும் அபிநயா என்ற மாணவி காது அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சையின்போது இதயத்துடிப்பு அதிகரித்ததால் உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுவயதில் இருந்தே காதில் அடிக்கடி சீழ் வடியும் பிரச்சனை இருந்ததால், இது தொடர்பாக அபிநயாவின் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 11 நாட்களுக்கு முன்பு காதில் சீழ் வடிந்ததால் அபிநயாவிற்கு திருவொற்றியூர் காவல்நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்ய 45 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து கடந்த 14 ஆம் தேதி மாலை அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த பின் மாணவிக்கு இதயத்துடிப்பு அதிகரிக்க, அதன் பிறகு மாணவி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி அபிநயாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.