தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்குச் சீல் வைக்க முடிவு செய்திருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.
தமிழகத்தில் குறிப்பிட்ட மைக்ரான் அளவுக்கு குறைவாக இருக்கின்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருந்தும் பல்வேறு கடைகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டாலும் அது பெரிய அளவில் பயனளிக்காமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிளாஸ்டிக் தடை தொடர்பாக ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்து பேசிய அரசு வழக்கறிஞர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு இனி சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.