Skip to main content

பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன்

Published on 26/09/2017 | Edited on 26/09/2017
பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நம் நாட்டில் 1983ம் ஆண்டில் பியர்ள்ஸ் அக்ரோடெக் கார்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 30 ஆண்டுகள் செயல்பட்ட இந்நிறுவனம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்தது. ஆனால் இந்நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை சேர்த்ததற்காக பணிபுரிந்த களப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய கமிஷன் தொகையை வழங்கவில்லை. மேலும் இந்நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தது. எனவே இந்நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்பு இந்நிறுவனம் தடை செய்யப்பட்டுவிட்டது. 

உடனடியாக 3 மாத காலத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை. இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இருந்த சுமார் 6 கோடி பேருக்கும் சேர்த்து மொத்தமாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை திருப்பி தர வேண்டும். முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் முதலீடு செய்ததற்கு பலனாக நிலமோ, பணமோ கொடுக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் முதலீடு செய்வதற்கு காரணமாக இருந்த களப்பணியாளர்களிடம், முதலீடு செய்த பணத்தை திருப்பி வாங்கிக்கொடுங்கள் என வற்புறுத்துகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் இடையேயான பிரச்னை முற்றியுள்ளது.

இதனால், வழக்கு எப்போது முடிவுக்கு வரும், எப்போது நமக்கு பணம் கிடைக்கும் என வாடிக்கையாளர்களும், களப்பணியாளர்களும் நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். எனவே மத்திய அரசு - இந்நிறுவனத்தின் மீதான வழக்கை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் சேர வேண்டிய தொகையை பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்