இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் இறுதி மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல் நாளை (01.06.2024) நடைபெற உள்ளது. இதனை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து நேற்று (30.05.2024) மாலை 5 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையும் முடிந்தது. ஜூன் நான்காம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி சார்பாக ஒரு அறிக்கை வெளியானதாகக் கூறப்படுகிறது. அதில் வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகே தபால் வாக்குகள் எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் வாக்கு எண்ணிக்கையின் முதலில் தபால் ஓட்டுக்களையே முதலில் எண்ண வேண்டும். அதாவது தபால் ஓட்டுக்களை எண்ணி முடித்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியைத் தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில், முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இறுதியாகத்தான் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே வழக்கமான முறையின் படி தபால் வாக்குகளையே முதலில் எண்ண வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் நடைமுறை அடிப்படையில் தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகு அரை மணி நேரம் கழித்து அதன் பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும். இதுதான் வழக்கமான நடைமுறை. அதில் குழப்பம் எதுவும் இருக்கக் கூடாது. அதே சமயம் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கொடுத்த செய்திக்குறிப்பினால், முகவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.