ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக ஓராண்டுக்கு முன்பு மாற்றினார் நடிகர் ரஜினிகாந்த். அதோடு, கட்சிகள் அமைப்பதுபோல மாவட்ட செயலாளர், மாவட்ட துணை செயலாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி என பல அணிகளை உருவாக்க உத்தரவிட அதன்படி மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி வரை ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. கட்சி நிர்வாகிகளைப்போலவே வலம் வருகிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.
இந்நிலையில் ரஜினியின் பேட்ட திரைப்படம், ஜனவரி 10-ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக வேலூர் மாவட்டம் முழுவதும் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பேட்ட படத்தை காண ஏற்பாடுகள் செய்திருந்தனர். சோளிங்கரில் அதிகாலை 5.30 மணியிலிருந்து சுமதி திரையரங்கில் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என். இரவி தலைமையில் திரையரங்கம் முன்பு தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக மகளிரணி நிர்வாகிகள் பேட்ட பொங்கலை வைத்து திரைப்படம் காண வந்த ரசிகர்களுக்கு வழங்கினார்கள்.
தியேட்டர் முன் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை பழங்களை கொண்டு திருஷ்டி கழித்தும், பட்டாசு வெடித்தும், மேலதாளத்துடன் படத்தை காண வந்தனர். அப்போதுதான் ஒரு அமைப்பின், மாவட்ட செயலாளர் என்பதை மறந்து தாளத்துக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார் ரவி. அவரைப்பார்த்து மற்ற நிர்வாகிகளும் நடனம் ஆடத்துவங்கினர்.
இதுபற்றி நடனம் ஆடிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘இதெல்லாம் ஒரு ஆட்டமாங்க. 20 வருஷத்துக்கு முந்தி தலைவர் படம் ரிலீஸ் அப்ப நாங்க போடாத ஆட்டமா, இப்ப இருக்கற எந்த நடிகருக்கும் அப்படியொரு ஆட்டத்தை நான் பார்க்கல. தலைவர் படம் வருவதுதாங்க எங்களுக்கு திருவிழா. பதவி வந்துடுச்சிங்கறதுக்காக பழசை மறந்துட முடியுமா’ என கேள்விகேட்டார்.
‘வயசானாலும் ஒன் ஸ்டைல் அப்படியே இருக்கு’ என படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் ரஜினியை பார்த்து வசனம் பேசியதுபோல, வயசானாலும் ரசிகர் மானோபாவம் மாறாமல், ரஜினி மீது தீரா காதலுடன் அவரது ரசிகர்கள் இருப்பதே அவருக்கு பெரும் பலம்.