Skip to main content

கரோனா ஊரடங்கு; சத்தமே இல்லாமல் உயரும் பெட்ரோல், டீசல் விலை!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020


கரோனா காலத்தில் தினம் தினம் உயர்ந்து வரும் வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலையின் உயர்வு பொதுமக்களின் கழுத்தை நெரித்து வருகிறது. இதனை கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட முடியாத நிலமையாகி விட்டதால் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.


கடந்த 10 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது பல நிலைகளை கடந்து, தற்போது பல தளர்வுகளோடு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 


இந்நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையும் குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து கடந்த 10 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சத்தமே இல்லாமல் வரலாறு காணாத அளவில் உயர்த்தி வருகின்றனர். வாழ்விழந்து தவித்துவரும்  நடுத்தர மற்றும் கடைகோடி மக்களை மிகவும் கஷ்டபடுத்தி வருகிறது. இதனை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும், சமுக ஆர்வளர்களும், பொதுமக்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 


அது குறித்து வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் உயர்த்துவதற்கான காரணம் புரியவில்லை. ஆனால் சத்தமே இல்லாமல் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல்  விலைகளை உயர்த்தி வருகின்றனர். இதனால் நடுத்தர, அடிதட்டு மக்களின் இன்றைய நிலமையை புரிந்து கொள்ளாத அரசாகவே மத்திய அரசு உள்ளது.


கடந்த ஜூன் 7ம் தேதி லிட்டருக்கு ரூபாய் 76.07  என்றிருந்த பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் உயர்த்தப்பட்டு தற்போது ரூபாய் 80.37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பத்து நாட்களில் லிட்டருக்கு ரூபாய் 4.30  உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல டீசல் விலை கடந்த ஜூலை 7ஆம் தேதி லிட்டருக்கு ரூபாய் 68.74 ஆக இருந்தது.  அது படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூபாய் 72.69 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது பத்து நாட்களில் லிட்டருக்கு ரூபாய் 4.43 உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இது போல பத்து நாட்களில் படிப்படியாக தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்த பட்டதாக வரலாறு இல்லை.


ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வேலையின்றி, வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், அவர்களுடைய இழப்பை பற்றி சிறிதும் அக்கறை படாமல், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் தங்களுடைய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களின் நலனை புறந்தள்ளி விலையை உயர்த்திவருவது வேதனையளிக்கிறது. இதனை  மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கடுமையாக கண்டிக்கிறது. உடனடியாக அரசும் எண்ணெய் நிறுவனங்களும் இந்த விலை உயர்வை வாபஸ் பெற்று பொது மக்கள் பாதிக்காத வகையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்