அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் 20 ஆண்டுகள் பழமைவாய்ந்த உழவர் சந்தையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரியலூர் மாவட்ட தலைநகரத்தில் பேருந்து நிலையம் அருகில் விவசாயிகளின் நலன் கருதி ஏழை எளிய மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் குறைந்த விலையில் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யும் வகையில் 23/09/2000ல் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
ஆனால், தொடங்கிய சில மாதங்களிலேயே உழவர் சந்தை செயல்பட முடியாத வண்ணம் முடக்கப்பட்டுவிட்டது. இதனால் அரியலூர் மாவட்ட பொதுமக்களும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் காய்கறிகள் ஏராளமாக விளைகின்றது. குறிப்பாக திருமானூர் ஒன்றியத்தில் வெற்றியூர், சாத்தமங்கலம், விரகாலூர், உள்ளிட்ட கிராமங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், உள்ளிட்ட ஏராளமான நாட்டுவகை காய்கறிகள் உற்பத்தி ஆகின்றன.
இந்நிலையில், உழவர் சந்தை மீண்டும் இயங்கிட மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முறையாக நடவடிக்கை எடுத்து, பொங்கலுக்கு முன்பாக உழவர் சந்தை இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் உழவர்களுக்கு நல்ல விலையும், அதே நேரத்தில் இடைத்தரகர்களின் தொந்தரவு இல்லாமலும், நுகர்வோர்கள் விவசாய விளைபொருட்களைக் குறைந்த விலையில் வாங்கி பயனடைய முடியும். எனவே மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களைப் போன்று சிறப்பான முறையில் உழவர் சந்தையினைச் செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் நடைபெற்ற குறை தீர் கூட்டத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.