தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஒரு லட்சம் பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 12ஆம் தேதி (நேற்று) காலை முதல் எண்ணப்பட்டுவருகிறது. இதுவரை 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்த தேர்தலில் பல்வேறு சுவாரசிய சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை. ஒரு வாக்கில் ஊராட்சி மன்றத் தலைவராக இளைஞர் ஒருவர் வெற்றிபெற்றார். 21 வயதில் இளம் பெண் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வான நிலையில், 90 வயது பெருமாத்தாள் பாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வாகியுள்ளார். நெல்லை மாவட்டம் சிவந்திபட்டு ஊராட்சி மன்றத் தேர்தலில் பெருமாத்தாள் பாட்டி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்து 1000 வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.