கல் குவாரிக்கு எதிராக போராடியவர் கரூரில் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகே செல்வகுமார் என்பவர் கல்குவாரி ஒன்றை நடத்திவருகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துவருகிறது. ஜெகன்நாதனை செல்வகுமார் கொலை செய்ய முயற்சித்தது தொடர்பாக அவர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
செல்வகுமாரின் குவாரி உரிமம் முடிந்துவிட்டதால் அதனை மூட வலியுறுத்தி ஜெகன்நாதன் கனிமவளத்துறையிடம் அண்மையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் அதிகாரிகள் குவாரியை மூடியுள்ளனர்.
இந்த நிலையில், காருடையாம்பாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த ஜெகன்நாதன் மீது லாரி ஒன்று மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஜெகன்நாதன் உயிரிழந்தார். விசாரணையில் அந்த லாரி செல்வகுமாரின் குவாரிக்குச் சொந்தமானது எனத் தெரியவந்ததையடுத்து, லாரி ஓட்டுநர் மற்றும் செல்வகுமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல் குவாரிக்கு எதிராக போராடியவர் லாரி ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.