கோவை மாநகராட்சி மாமன்ற பெண் மேயராக திமுகவின் திருமதி கல்பனா உள்ளார். திமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் அரசியல் மற்றும் நிர்வாகத்திற்கு புது வரவாக இருக்கிறார். 26 ந் தேதி மாமன்ற கூட்டம் மாநகராட்சி கட்டிடமான விக்டோரியா ஹாலில் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு மேயர் கல்பனா தலைமையில் மாமன்ற உறுப்பினரும், மேற்கு மண்டல தலைவருமான திருமதி தெய்வானையின் பிறந்தநாளையொட்டி அந்த அரங்கிலேயே பிறந்தநாள் கேக் வெட்டி அதை மேயரும் சில உறுப்பினர்களும் ஊட்டி மகிழ்ந்து கொண்டாடினார்கள். பிறந்தநாள் வாழ்த்துக்காக செய்யப்பட்ட ஒரு நிகழ்வாக இருந்தாலும் அந்த சபையில் நடந்தது தான் இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது விக்டோரியா மகாராணியின் பெயரை சிறப்பிக்கும் வகையில் முக்கிய நகரங்களில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கூட்ட அரங்கங்களாக விக்டோரியா ஹால் கட்டப்பட்டது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அந்த அரங்கத்தில் கேளிக்கை நிகழ்வு நடத்தக் கூடாது என்பது பற்றி புதிய மேயரான கல்பனா அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்கிறார்கள் சில உடன் பிறப்புகள். மேயர் கல்பனா அவர் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என கோவை திமுக மூத்த நிர்வாகிகளே கூறுகிறார்கள்.