கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குச்சிப்பாளையம் ஐய்யப்பன் நகர். இந்த பகுதியில் லோட்டஸ் பவுண்டேஷன் எனும் பெயரில் போதை மறுவாழ்வு மையம் மற்றும் மனநலம் மருத்துவமனை உள்ளது. இதில் கடந்த 05 ஆம் தேதி அன்று ஜா.சித்தாமூர் கிராமத்தில் வசிக்கும் பொன்முடி என்பவரது மகன் ராஜசேகர் மது பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது மைத்துனர் மூலமாக அழைத்து வந்து சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முந்தினம்(8.7.2024) இரவு 12 மணியளவில் உடல்நிலை சரியில்லை என கூறி ராஜசேகரை திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது செல்லும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்து உள்ளதாக அவரது மனைவிக்கு நிர்வாகத்தின் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த தனது கணவர் ராஜசேகரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ராஜாமணி மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளது என புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மணலூர்பேட்டை போலீசார் உடனடியாக ராஜசேகரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருப்பதை உறுதி செய்து லோட்டஸ் ஃபவுண்டேஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி (பொறுப்பு) பூபாலன் மற்றும் திருக்கோவிலூர் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் நேற்று நள்ளிரவு முதல் லோட்டஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை அடிப்படையில் இன்று போலீசாரின் முன்னிலையில் வருவாய் துறையினர் லோட்டஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் அதன் உரிமையாளர் பாஜக முன்னாள் மாவட்ட செயலாலர் காமராஜ் உட்பட 6 நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்திற்கு வந்த நபர் அடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை மறுவாழ்வு மையம் என்கிற பெயரில் வருவாய் துறை மூலம் சான்றிதழ் பெற்று கொண்டு முறையான பயிற்சி பெறாதவர்களை வைத்தும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் இங்கு இருப்பதாக கூறி மதுவுக்கு அடிமையானவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு பல ஆயிரங்களை கட்டணங்களாக வசூலிக்கின்றனர்.
அப்படி சேர்க்கப்படுபவர்களுக்கு அடி, உதை தரப்படுகிறது. அடி உதைக்கு பயந்து அவர்கள் மது அருந்தாமல் இருக்க வைக்கப்படுகின்றனர். அதன் பின்பு சிகிச்சை என்கிற பெயரில் மனநல சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அப்படியே அடித்து துன்புறுத்தியாக தான் அவர் இறந்துள்ளார் என்கிறது போலீசில் ஒரு தரப்பு. அதனாலேயே அவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.