திண்டிவனம் அருகே சில மாதங்களுக்கு முன்பு கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர் வழக்கில், தற்போது அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது வெளியே தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ் சேவூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரேம்குமார், வயது 35. இவர், தனது குடும்பத்தினருடன் சென்னை பிராட்வே பகுதியில் வசித்துவருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி அதே கீழ்சேவூர் கிராமத்தில் விவசாயக் கிணற்றில் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரேம்குமார், அவரது தாய் லட்சுமி ஆகியோரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னை பிராட்வேயில் பிரேம்குமார் சொந்தமாக காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். அதனை விற்றுவிட்டு பணம் தரும்படி அதே கீழ்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராமதாஸ் என்பவரிடம் பிரேம்குமார் கூறியுள்ளார்.
அந்தக் கடையை ராமதாஸ் 27 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பணத்தில் 17 லட்சம் ரூபாய் பணத்தை மட்டுமே பிரேம்குமாரிடம் கொடுத்துவிட்டு, ஏழு லட்ச ரூபாய் பணத்தைத் தான் கடனாக வைத்துக் கொள்வதாகும் சில மாதங்களுக்குப் பிறகு அந்த ஏழு லட்சம் பணத்தை திருப்பித் தருவதாக பிரேம்குமாரிடம் கூறியுள்ளார் ராமதாஸ். ஆனால், மாதங்கள் பல கடந்தன. ராமதாஸ், அந்த ஏழு லட்சம் பணத்தை பிரேம்குமாருக்கு திருப்பித் தராமல் ஏமாற்றிவந்துள்ளார். பிரேம்குமார், அந்த ஏழு லட்சம் பணத்தைத் தருமாறு அடிக்கடி ராமதாசை கேட்டுள்ளார்.
அந்தப் பணத்தைத் திருப்பித் தர மனமில்லாத ராமதாஸ், அடிக்கடி பணம் கேட்டு தொல்லை தரும் பிரேம்குமாரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்துள்ளார். அதன்படி கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி அந்த ஏழு லட்சம் பணம் தருவதாக கூறி சென்னையிலிருந்து தனது நண்பர்களுடன் ஆட்டோவில் கீழ் சேவூர் கிராமத்திற்கு பிரேம்குமாரை அழைத்துவந்துள்ளார். அங்கு, பிரேம்குமாருக்கு, தனது நண்பர்களுடன் சேர்ந்து ராமதாஸ் அதிக அளவில் மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளார்.
இதில் பிரேம்குமார் அதிகளவில் போதை அடைந்துள்ளார். அந்நிலையில், ராமதாசும் அவரது நண்பர்களும் பிரேம்குமாரை அருகில் இருந்த விவசாய கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். சம்பவத்திற்கு மறுநாள் பிரேம்குமார் தாயார் லட்சுமியிடம் செல்ஃபோனில் தொடர்புகொண்ட ராமதாஸ், உங்கள் மகன் பிரேம்குமார் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துவந்தார். அந்தப் பெண்ணை தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். எனவே, உங்களை இங்கு அழைத்து வரும்படி பிரேம்குமார் என்னிடம் கூறியுள்ளார். அதற்காக நானும் எனது நண்பர்களும் உங்களை அழைப்பதற்காக சென்னைக்கு வருகிறோம் என்று கூறியதோடு, அதன்படி ஒரு காரில் தனது சக நண்பர்களுடன் ராமதாஸ் சென்னைக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து லட்சுமியை அந்தக் காரில் அழைத்துவந்துள்ளனர். அப்படி வரும்போது ஆரணி பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமியை காரில் இருந்தபடியே கழுத்தை நெரித்துக் கொலை செய்து சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சாலையோரம் கிடந்த லட்சுமியின் உடலை போலீசார் கண்டறிந்து வழக்குப் பதிவுசெய்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்திவந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அப்பகுதியில் சம்பவத்தன்று பயன்படுத்தப்பட்ட செல்ஃபோன்களின் சிக்னலை ஆய்வுசெய்ததில் கொலையாளிகள் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், பிரேம்குமாரை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. அதையடுத்து திருவண்ணாமலை போலீசார் பிரம்மதேசம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து பிரம்மதேசம் போலீசார் திருவண்ணாமலை சென்று அங்கு பிடிப்பட்ட கொலையாளிகளை அழைத்துவந்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் கொலையாளிகள் அளித்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சென்னை வியாசர்பாடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் ராஜன் என்பவரை கைது செய்துள்ளனர். இந்தக் கொலையில் தொடர்புடைய ராமதாஸ் உட்பட மேலும் பலரை பிரம்மதேசம் போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். விரைவில் அனைவரையும் கைது செய்வோம் என்கிறார்கள் போலீசார். ரூ. 7 லட்சம் பணத்திற்காக தாயையும் மகனையும் கொலை செய்த கும்பலின் கொடூர செயல் திண்டிவனம் பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.