ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே காரில் ஏ.சி. போட்டு படுத்து தூங்கிய மேலாளர் பரிதாபமாக உயிர் இறந்தார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கமலாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் 44 வயது. அனந்தகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் ரகுபதி நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் அனந்தகிருஷ்ணன் திருச்சியில் உள்ள தனது அம்மாவுக்கு போன் செய்து தான் இன்று கிளம்பி ஊருக்கு வருவதாக தகவல் கூறியிருக்கிறார் பிறகு அவருடைய நண்பர் ஒருவரின் கார் மூலம் அனந்தகிருஷ்ணன் திருச்சிக்கு புறப்பட்டு உள்ளார்.
மாலை 6.30 மணி அளவில் அனந்தகிருஷ்ணன் ஈரோடு முத்துக்கவுண்டன் பாளையம் - பரிசல் துறை சாலையில் காரில் வந்துகொண்டிருந்தபோது அசதியாக இருக்க காரில் ஏ.சி.போட்டு சிறிது நேரம் தூங்கிவிட்டு செல்லலாம் என்று நினைத்து சாலையோரம் காரை நிறுத்தி ஏசி போட்டு தூங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே காருக்குள் மயங்கி கிடந்துள்ளார். அவ்வழியாக வந்தவர்கள் காருக்குள் மயங்கி கிடப்பதை பார்த்து கார் கதவை திறந்துள்ளனர். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனந்தகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடல் சோர்வு, மதிய வெயிலின் தாக்கத்திற்கு காரில் ஓடும் ஏ.சி.யை போட்டு சிறிது நேரம் தூங்கலாம் என நினைத்து தூங்கியவர் ஆக்ஸிஜன் குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே காருக்குள் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இப்படித்தான் காரில் ஏ.சி.போட்டு தூங்கும் வழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.